| வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு |
| |
|
புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.
இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.
தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில், "பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் கூறிய போது, "குறிப்பிட்ட சில சம்பவங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அப்படி பேசியிருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டது.
"ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே போய், போலீசிடம் புகார் செய்வதோ, கோர்ட் படியேறுவதோ கடைசி கட்டத்தில் நடக்கிறது. "கணவன், அவன் குடும்பத்தார் கொடுமைகளை சகித்துக்கொள்ளவே ஒரு பெண் நினைக்கிறாள். அது தான் இன்றைய நாள் வரை நடந்து வருகிறது. அது முடியாத போது தான், கடைசி கட்டமாக வெளியேறுகிறார்; போலீசுக்கு போகிறாள்; கோர்ட் படியேறுகிறாள். அப்படியிருக்கும் போது, சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதான கேள்விக்கே இடமில்லை' என்றும் சுதா சுந்தரம் கூறினார்.
|
|
|