| |
| தலைநகர் டில்லியில் நாளை நடக்கிறது முதல்வர்கள் மாநாடு |
| ஜனவரி 05,2009 |
| தலைநகர் டில்லியில் நாளை நடக்கிறது முதல்வர்கள் மாநாடு |
| |
|
புதுடில்லி : அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு டில்லியில் நாளை நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், பயங்கரவாதம், அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அத்துடன் மாபியா கும்பல்கள், பணம் பறிக்கும் கும்பல்கள் மற்றும் நில மோசடி கும்பல்களை ஒடுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, தேசிய புலனாய்வு நிறுவனம் அமைக்கவும் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. அதே நேரத்தில், மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், "அணுசக்தி நிலையம் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கமாண்டோ படையினரை நிறுத்துவது உட்பட எட்டு விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஓட்டல்கள் மற்றும் வர்த்தக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அதன் நிர்வாகங்களை மாநில அரசுகள் கேட்டுக் கொள்ள வேண்டும். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும். மாபியா கும்பல்கள், பணம் பறிக்கும் கும்பல்கள் மற்றும் நில மோசடி கும்பல்களின் செயல்பாடுகளை ஒடுக்க வேண்டும்' என, யோசனை தெரிவித்திருந்தார். அத்துடன், பயங்கரவாத பிரச்னை குறித்து விவாதிக்க, ஜனவரி 6ம் தேதி அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இதன்படி, டில்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு நடக்கிறது.
உள்துறை அமைச்சர் சிதம்பரம் இந்த மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார். மாநாட்டில், பயங்கரவாதம், அதை ஒடுக்க மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், உளவுத் துறையின் செயல்பாட்டை தீவிரப் படுத்துவது, அவை தரும் தகவல்களை பகிர்ந்து கொள்வது, கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவது, பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக் கப்பட உள்ளன. பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு நிறுவனம், அதன் செயல்பாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளன. எந்த விதமான பயங்கரவாத தாக்குதல்களையும் சமாளிக்கும் வகையில், மாநில அரசுகள் தயாராக இருக்க வேண் டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதனால் தான், நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் என்.எஸ்.ஜி., படையின் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. பின் ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் அமைக்கப்பட உள்ளன. இந்தப் படைப் பிரிவுகள் அமைப்பதற்கான வழிமுறைகள், அதற்காக ஆட்களை தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது, அதன்பின் அவர்களை பணியில் அமர்த்துவது போன்ற பிரச்னைகள் குறித்தும் முதல்வர்களுடன் ஆலோசிக்கப்பட உள்ளது.
பயங்கரவாதிகள் நடத்த நினைக்கும் எந்த விதமான தாக்குதல்களையும் முறியடிக்க வேண்டும் எனில், புலனாய்வு அமைப்புகள் சிறப்பான வகையிலும், திறமையான வகையிலும் செயல்பட வேண்டியது அவசியம். அதற்காக, மத்திய, மாநில உளவு நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது, போலீஸ் படை மற்றும் மாநில உளவுப் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவது, போலீஸ் துறை சீர்திருத்தங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. முதல்வர்கள் மாநாட்டை தொடர்ந்து, நாளை மறுநாள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா உட்பட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களின் முதல் வர்கள் பங்கேற்கின்றனர். நக்சலைட் வன்முறையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ள 33 மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்தும், ஏற்கனவே செயல்படுத்தப் படும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
துரைமுருகன் பங்கேற்பு: டில்லியில் நாளை நடக்கவுள்ள முதல்வர்கள் மாநாட் டில், தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற் கிறார். இதற்காக அவர், இன்று டில்லி புறப்பட்டுச் செல்கிறார். திருமங்கலம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் கருணாநிதி ஈடுபட உள்ளதாலும், டில்லியில் கடும் குளிர் நிலவுவதாலும் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், இந்த வாரம் சென்னை வரும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன், பாதுகாப்பு விஷயங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|